×

பட்டிவீரன்பட்டியில் பொங்கலுக்கு தயாரான மஞ்சள்செடிகள்-தொடர் மழையால் சாகுபடி அமோகம்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர், ரெங்கராஜபுரம், செங்கட்டான்பட்டி, சுந்தரராஜபுரம், அய்யம்பட்டி, சாலைப்புதூர், நல்லாம்பிள்ளை போன்ற பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் செடிகள் பயிரிட்டுள்ளனர். இந்த மஞ்சள் செடிகள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பறிக்க ஆயத்தமாக உள்ளன.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது கிழங்குகளுடன் கூடிய மஞ்சள்செடிக முக்கியமாக இடம் பெறும். பொங்கல் பானைகளில் மஞ்சள் செடிகளை கட்டி பொங்கல் வைப்பது என்பது தமிழர்களின் பழக்கமாகும். கடந்த சில வருடங்களாக நிலவி வந்த வறட்சி காரணமாக மஞ்சளை பெரும்பாலான விவசாயிகள் பயிரிடவில்லை. தற்போது பெய்த தொடர்மழை காரணமாக இந்த ஆண்டு மஞ்சள் செடிகளை பட்டிவீரன்பட்டி விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

இதுபற்றி இப்பகுதியைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி ஜெயராஜ் கூறுகையில், மஞ்சள் மங்கள பொருளாக இருப்பதால் நிலங்களில் மஞ்சள் நட்டால் மற்ற விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் மஞ்சள்சாகுபடியை செய்து வருகிறோம். சித்திரை மாதத்தில் மஞ்சள் பயிரிடும் பணி தொடங்கும். பலன் கொடுக்க 10 மாதங்களாகும். தை மாதத்தில் பொங்கல் நேரத்தில் செடிகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் பாதி விளைந்த மஞ்சள் கிழங்குகளுடன் இருக்கும். இந்த பருவத்தில் பறித்தால் பொங்கல் பண்டிகையின் போது வீடுகளில் சாமி குப்பிடவும், பொங்கல் பானைகளிலும் மங்களபொருளாக பயன்படுத்தலாம்.

பொங்கல் பண்டிகைக்கான தேவை முடிந்து மீதமுள்ள முழுவளர்ச்சியடைந்த மஞ்சளை செடியிலிருந்து பிரித்து எடுக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும். அதன்பின்பு மஞ்சளை அவித்து பக்குவப்படுத்தி விதைக்குப் போக அப்போதைய மார்க்கெட் நிலவரப்படி ஈரோடு மஞ்சள் மொத்த மார்க்கெட்டுக்கு அனுப்பி வைப்போம். தற்போது பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காகவும், சந்தைகளில் விற்பதற்காகவும் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் முன்னதாக மொத்த வியாபாரிகள் தோட்டங்களுக்கு நேரிடையாக வாங்க வருகை தருவார்கள் என்றார்.

Tags : Pongal ,Pattiviranapatti , Pattiviranapatti: Near Pattiviranapatti, Nellore, Rengarajapuram, Sengattanpatti, Sundararajapuram, Ayyampatti, Chalaiputhur,
× RELATED தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் பொங்கல் கரும்பு சாகுபடி பணி